சென்னை: புயல் பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர்களை வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டது பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி, அதை கிழித்து எறிந்த நிலையில், திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்- அவுட் வைக்கக்கூடாது – ஸ்டாலின் ஒப்புதலோடு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
திமுகவின் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”2019-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்தபோது, “திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன். இதனை மீறி வைக்கும் திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திமுக தலைவர் கடந்த 13-9-2019 அன்று அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கை வெளிவந்த நாள்முதல் திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெரும்பாலானோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்காமல், தலைவர் அவர்களின் ஆணையை பின்பற்றி வந்தனர். இதற்கு மாறாக, பேனர் வைத்த திமுக நிர்வாகிகள் சிலர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்தது.
ஆனால், தற்போது ஒரு சிலர், தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைப்பதாக தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்சி பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்றும்; பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக் கூடாது என்றும் கழகத் தலைவர் ஒப்புதலோடு அறிவிக்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுரையை யாரேனும் மீறியதாக தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு வருமேயானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைக் கழக மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
முன்னதாக ஃபெஞ்சல் புயல் வடமாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சாத்தனூர் அணைமுன்னறிவிப்பு இன்றி திறந்து விடப்பட்டதால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் புதிதாக கட்டப்பட்டட தென்பெண்ணை ஆற்று பாலமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால், பொதுமக்கள் ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில். புயல் பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றி அள்ளி வீசி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல இடங்களில் ஆய்வுக்கு வரும் அமைச்சர்களை வரவேற்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்ட பொதுமக்களும் அதை கிழித்து எறிந்தனர். இதனால் வட மாவட்டங்களில் பரபரப்பு நிலவியது.
விழுப்புரத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடியாததால் உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் சூழலும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் உணவு, தண்ணீர் கேட்டு இருவேல்பட்டு கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருவேல்பட்டு பகுதிக்கு சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி உள்ளிட்டோர் மீது மக்கள் ஆத்திரத்தில் சேற்றை வாரி இறைத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் சேற்றை வாரி இறைத்த ராமர் என்கிற ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திருவெண்ணைநல்லூர் – திருக்கோவிலூர் சந்திப்பில் திமுக சார்பில் அமைச்சர் பொன்முடிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் ஒன்றுகூடி கிழித்து எரிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் புயல் வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்பட அடிப்படை தேவைகளைகூட நிறைவேற்றவில்லை என போராடி வரும் மக்கள், கோபத்துடன் ஆட்சியாளர்களை எதிர்க்க துணிந்து விட்டதால், திமுக தலைமை, பேனர்கள், பிளக்ஸ்கள் வைக்க தடை விதித்துள்ளது.