இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவின் சொத்துக்களை மீட்டதன் மூலம் வங்கிகளுக்கு ₹ 14,131.6 கோடி திரும்பக் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கூறினார்.

இதையடுத்து தனது ₹ 6,203 கோடி கடனுக்காக ₹ 14,131.6 மதிப்புள்ள சொத்துக்களை வங்கிகளிடம் ஒப்படைத்தது குறித்து எப்படி என்பது குறித்து சட்டப்பூர்வமாக நிரூபிக்க முடியாவிட்டால், நான் இதற்கு சட்டப்பூர்வமாக நிவாரண உரிமை கோருவேன் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

2024-25 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (KFA) தொடர்பான கடன் வழக்கில் அவரது ரூ.14,131.6 கோடி மதிப்புள்ள சொத்துகள் பொதுத்துறை வங்கிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தவிர, நீரவ் மோடி வழக்கில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரூ.1,052.58 கோடி மதிப்புள்ள சொத்துகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மெஹுல் சோக்சி வழக்கில் ரூ.2,565.90 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (என்எஸ்இஎல்) வழக்கில் விஜய் மல்லையாவின் மோசடிக்கு ஆளான உண்மையான முதலீட்டாளர்களுக்கு ரூ.17.47 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் திருப்பி அளிக்கப்பட்டன என்றும் கூறினார்.

இந்த நிலையில் “தனது கடனுக்காக இரண்டு மடங்கிற்கும் அதிகமான சொத்துக்களை எடுத்து” என்று இந்திய அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் வங்கிகள் மீது விஜய் மல்லையா தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவிட்டுள்ளார்.

“கடன் மீட்பு தீர்ப்பாயம் (டிஆர்டி) KFA மீது ரூ. 6203 கோடி கடனை நிர்ணயித்துள்ளது, அதில் ரூ. 1200 கோடி வட்டியும் அடங்கும். இப்போது நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் ED மற்றும் வங்கிகள் என்னிடம் இருந்து ரூ.14,131.60 கோடியை மீட்டுவிட்டதாக அறிவித்துள்ளார். நான் இன்னும் பொருளாதார குற்றவாளி என்று அழைக்கப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் செலுத்த வேண்டிய தொகையை விட அதிகமாக ஏன் எடுத்தார்கள் என்பதை ED மற்றும் வங்கியால் சட்டப்பூர்வமாக நிரூபிக்க முடியாவிட்டால், நான் இதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கையை நாடுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.