வங்கிக் கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் விதமாக கடன் வாங்கியவரின் புகைப்படத்தை வங்கிகள் வெளியிட முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

செம்பழந்தி வேளாண் மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தில் கடன் வங்கி அதை திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல் அடங்கிய விளம்பரப் பலகை அந்த வங்கியின் தலைமை அலுவலகம் முன் வைக்கப்பட்டது.

இந்த விளம்பர பலகையை அகற்றுமாறு கூட்டுறவு சங்க உதவிப் பதிவாளர் தெரிவித்ததை எதிர்த்து, செம்பழந்தி வேளாண்மை மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முரளி புருஷோத்தமன் முன் விசாரணைக்கு வந்தது.

கூட்டுறவு வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விளம்பரப் பலகை வைப்பதற்கு முன்பு, இந்த கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் பணம் கேட்டு வங்கி பலமுறை பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால், விளம்பரப் பலகை வைத்து விவரங்களை வெளியிட்ட பிறகு தான் பலர் தங்கள் கடனை திருப்பிச் செலுத்தியதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வழிமுறை கைகொடுத்ததை அடுத்து இதேபோன்று விளம்பர பலகைகள் வைக்க வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

இது அசையா சொத்துக்களை இணைத்து விற்பனை செய்யும் போது அனுமதிக்கப்படும் கேரள கூட்டுறவு சங்கங்கள் விதி 1969 இன் விதி 81 இல் குறிப்பிடப்பட்டுள்ள “தண்டோரா போடுவது” போன்றது என்று வாதிட்டனர்.

“தண்டோரா போடும்” நடைமுறை காலாவதியான மற்றும் பழமையான முறையாகும் என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை விளம்பரப் பலகைகள் மூலம் வெளியிடுவது அந்த தனிப்பட்ட நபரின் கண்ணியத்துடனும் நற்பெயருடனும் வாழும் உரிமையை பறிக்கும் செயல் என்று கூறியது.

கடன் வாங்கியவர்களின் வாழ்வை பாதிப்பதோடு அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கும் செயலை சட்ட நடைமுறையின்படி செய்ய முடியாது.

கடன் வாங்கியவர்களை அவர்களின் நற்பெயரையும் தனியுரிமையையும் கெடுக்கும் வகையில் அச்சுறுத்தல் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி வங்கிகள் வற்புறுத்த முடியாது.

இத்தகைய செயல்கள் அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் ஒரு நபரின் உரிமையை மீறுவதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இது எந்தச் சட்டத்திலோ அல்லது விதிகளிலோ குறிப்பிடப்பட்ட மீட்பு முறை அல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதையடுத்து, கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தும் வகையில் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை வங்கிகள் வெளியிட முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.