டில்லி
தேசிய ஊரடங்கால் கடன் தவணை கட்ட அவகாசம் அளித்ததைக் கொண்டு மோசடி பேர்வழிகள் வங்கிக் கணக்கில் மோசடி செய்யலாம் என வங்கிகள் எச்சரித்துள்ளன.
கொரோனா வைரஸ் படுவேகமாக பரவி வருவதால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய ஊரடங்கால் பலர் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் வசதிக்காக வங்கிக் கடன்களுக்கு வட்டி மற்றும் தவணை செலுத்த 3 மாதம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நீட்டிப்பைப் பெற வாடிக்கையாளர்கள் அவரவர் வங்கியின் இணைய தளம் மூலம் அனுமதி பெற வேண்டும். இதனைப் பலரும் அறியாமல் உள்ளனர். இதைப் பயன்படுத்தி ஒரு புதிய பண மோசடி நடப்பதாக வங்கிகள் எச்சரித்துள்ளன. அதன்படி மோசடி பேர்வழிகள் வாடிக்கையாளர்களுக்கு தொலைப்பேசி மூலம் பேசி தவணை நீட்டிக்க உதவி செய்வதாகக் கூறுகின்றனர்.
இதை நம்பி விவரம் அளிக்கும் வாடிக்கையாளர்களிடம் வங்கிக் கணக்கு எண், பாஸ்வர்ட், ஏடிஎம் கார்ட் எண், அதன் பாஸ்வர்ட் போன்றவற்றை வாங்குகின்றனர். அதன் பிறகு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து இந்த விவரங்கள் மூலம் பண மோசடி நிகழ்கிறது. இது குறித்துப் பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இ மெயில் மற்றும் எஸ் எம் எஸ் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
அந்த எச்சரிக்கை செய்தியில் மாதத் தவணையில் இருந்து விலக்கு அளிப்பதாகக் கூறி வங்கிக் கணக்கு எண், கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் எண், சிவிவி எண், பாஸ்வார்ட் உள்ளிட எதையும் யார் கேட்டாளும் தெரிவிக்க வேண்டாம் எனவும் அவை அனைத்தையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.