மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வங்கி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.
ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் பங்கீடுகளை கையகப்படுத்துதல் மற்றும் மாற்றுதல் சட்டம் உள்ளிட்டவற்றில் 19 திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
வங்கி சட்டங்கள் திருத்த மசோதா வங்கித் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள், நான்கு பேர் வரை நாமினிகளாக அறிவிக்க இந்த மசோதா இடமளிக்கிறது.
உரிமை கோரப்படாத ஈவுத்தொகைகள், பங்குகள் மற்றும் வட்டி அல்லது பத்திரங்களை மீட்டெடுக்க ஐ.இ.பி.எப்., எனப்படும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்திற்கு வழி ஏற்படுத்தியுள்ளது.
தனிநபர்கள் நிதியிலிருந்து பரிமாற்றங்கள் அல்லது பணத்தை திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.