மும்பை: இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறம் என வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், மத்தியஅரசு வங்கி ஊழியர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி வங்கி வேலை நிறுத்தம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மார்ச் 24 மற்றும் 25-ந் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து இருந்தன.
இதையடுத்து வேலைநிறுத்தம் அறிவித்திருந்த வங்கி சங்கங்களை இந்திய வங்கிகள் சங்கம், ஐக்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது, வாரத்தில் 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும், பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், அதற்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஐக்கிய கூட்டமைப்பு முன்வைத்தது.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின் குடை அமைப்பான UFBU, பொதுத்துறை வங்கிகளில் பணியாட்கள் மற்றும் அதிகாரி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தை முன்னதாக அறிவித்தது. IBA உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வங்கி தொழிற்சங்கங்கள் வரும் மார்ச் 24-25 தேதிகளில் இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம் செய்கின்றன
இந்த பேச்சுவார்த்தை குறித்து பேசிய ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எல்.சந்திரசேகர், “முக்கிய கோரிக்கைகள் எவற்றையும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளார். எனவே ஏற்கவனே திட்டமிட்டபடி, 24 மற்றும் 25ம் தேதிகளில் நாடு தழுவிய 2 நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்” என்றும் அவர் கூறியுள்ளார்.