சென்னை:  நாடு முழுவதும்  வரும் திங்கள், செவ்வாயில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகளில் காலியாக உள்ள அணைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்,வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும், உள்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கிகள் ஊழியர்கள் சங்கத்தினர், 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.  இந்த போராட்டத்தை,  அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 9 சங்கங்கள் அறிவித்தன.

இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம், ஐக்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியது. இந்த பேச்சுவார்த்தையின்   இந்திய வங்கி சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய நிதி துறைச் செயலாளர் பங்கேற்றனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் இவற்றை நேரடியாக கண்காணிப்பதாக தலைமை தொழிலாளர் ஆணையர் தெரிவித்தார். தொடர்ந்து  அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை  ஏப்ரல் 3ம் வாரத்தில் மீண்டும்  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஏற்ற வங்கி தொழிற்சங்கத்தினர், அரசுடன் நடத்திய  பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வரும் 24, 25-ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.