டில்லி:

ங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ள நிலையில், அதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினமும் வருவதால், 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாத நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

பொதுதுறை வங்கிளான பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் பிற 10 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. வங்கி ஊழியர்கள் சம்மேளனமும் மத்தியஅரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  மத்தியஅரசின் முடிவை எதிர்த்து,  வருகிற 25-ஆம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் 27 ஆம் தேதி நள்ளிரவு வரை என 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் (சண்டிகர்) தீபல் குமார் சர்மா அறிவித்து உள்ளார்.

இந்த வங்கி ஊழியர்கள் போராட்டத்தில், நாடு முழுவதும் உள்ள  அனைத்து வங்கிகளின் அதிகாரிகளும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வங்கிகள் செயல்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

மேலும் மாதத்தின் கடைசி கடைசி சனிக்கிழமை என்பதால் வரும் 28ந்தேதி மற்றும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிக்கு விடுமுறை வருவதால், செப்டம்பர் 26ந்தேதி முதல் 29-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயமும், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளப் பட்டுவாடா ஏற்படுவதிலும் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.