டெல்லி:

வங்கி ஊழியர்கள் வரும் 28ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்படலாம்.

வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் நேற்று நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது.

அதனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும், 10 லட்சம் ஊழியர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். வங்கிகளை தனியார் மயமாக்கவும், ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் வங்கி ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்தனர். இதற்கான ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்தில், பொதுத்துறை வங்கிகளும், பல தனியார் வங்கிகளும் பங்கேற்கின்றன. இதனால் தமிழகத்தில், 10 ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்படும். 28 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.