அலாம்பூர்
ஒரே கணக்கு எண்ணை இருவருக்குப் பாரத ஸ்டேட் வங்கி அளித்ததால் ஒருவர் கணக்கில் இருந்த பணத்தை மற்றவர் எடுத்து தாறுமாறாக செலவு செய்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அலாம்பூர் என்னும் ஊரில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது. இதில் ஹுக்கும் சிங் என்னும் பெயருள்ள இருவர் வங்கிக் கணக்கைத் தொடங்கி உள்ளனர். பெயர் ஒன்று என்றாலும் ஒருவர் ரூரை என்னும் சிற்றூரையும் மற்றவர் ரௌனி என்னும் சிற்றூரினையும் சேர்ந்தவர். ரூரல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஹுக்கும் சிங் பணத்தை முதலீடு செய்ய அதை ரௌனியை சேர்ந்தவர் எடுத்து செலவு செய்துள்ளார்.
கடந்த மாதம் ரூரை கிராமத்தைச் சேர்ந்த ஹுக்கும் சிங், தனது வங்கிக் கணக்கைப் பார்த்தபோது, சேமிக்கப்பட்ட பணம் அதிகமான அளவில் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அவர் வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில், தவறுதலாக ஒரே பெயர் கொண்ட இருவருக்கும் ஒரே வங்கிக் கணக்கு எண் அளிக்கப்பட்டது தெரியவந்தது.
வங்கி மேலாளர் “கடந்த ஓராண்டாக ஒருவர் இந்தக் கணக்கில் பணத்தைச் செலுத்தியுள்ள நிலையில் மற்றொருவர் இந்தக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து வந்துள்ளார். இது வழக்கமான பரிவர்த்தனை என்று கருதியதால் இந்த தவற்றை வங்கி கண்டுபிடிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரௌனி கிராமத்தைச் சேர்ந்த ஹுக்கும் சிங்,“என்னுடைய வங்கிக் கணக்கில் பிரதமர் மோடி தான் பணம் செலுத்துகிறார் என்று நினைத்து, அந்தப் பணத்தை நான் எடுத்து செலவு செய்தேன். வங்கி ஊழியர்கள் செய்த இந்த தவற்றுக்கு நான் பொறுப்பேற்க முடியாது” எனக் கூறி உள்ளார்
பாடுபட்டு சேமித்த பணத்தை இழந்த ரூரை கிராமத்தைச் சேர்ந்த ஹுக்கும் சிங், ”கடந்த 2016-ஆம் ஆண்டு ந்த வங்கியில் கணக்கைத் தொடங்கினேன். அன்று முதல் நான் தொடர்ந்து பணத்தைச் செலுத்தி வருகிறேன். சென்ற மாதம் நான் நிலம் வாங்கலாம் என்பதற்காக என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வந்தேன்.
அப்போது என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 89 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. நான் இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்து புகார் அளித்தேன். பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் என்னுடைய பணத்தை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.