டாக்கா

ங்கதேச் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித் இன்று தூக்கிடப்பட்டார்.

இந்தியாவில் இருந்து பிரிந்த இரு பாகிஸ்தானில் கிழக்கு பாகிஸ்தான் 1971 ஆம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் வங்கதேசம் என்னும் புதிய நாடாக உருவெடுத்தது.  இந்த புரட்சியைச் செய்த தலைவரான ஷேக் முஜிபுர் ரகுமான் அந்நாட்டின் முதல் அதிபர் ஆனார்.  தற்போதைய பிரதமரான ஷேக் ஹசினாவின் தந்தையான முஜிபுர் ரகுமானுக்கு எதிரிகள் அதிகம் இருந்தனர்.

கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதி அப்துல் மஜித் உள்ளிட்ட பல ராணுவ அதிகாரிகள் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர்.  அவர்கள் ஷேக் முஜிபுர் ரகுமான், அவர் குடும்பத்தினர் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களைக் கொலை செய்தனர்.   இந்த வழக்கில் கடந்த 1998 ஆம் ஆண்டு அப்துல் மஜித் மற்றும் சில ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் அப்துல் மஜித் தப்பி ஓடியதால் மற்ற ராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  அப்துல் மஜித் இந்தியாவுக்கு ஓடி வந்து கொல்கத்தாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.  சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு  அவர் மீண்டும் வங்கதேசம் சென்று டாக்கா நகரில்  பதுங்கி இருந்தார்.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் அப்துல் மஜித் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.  அவரை இன்று தூக்கிட நீதிமன்றம் உத்தரவிட்டது.   இந்த தண்டனையை நிறுத்தக் கோரி வங்க அதிபர் அப்துல் ஹமீத் இடம்  அப்துல் மஜித் கருணை மனு அளித்தார்.

அந்த மனுவை அதிபர் நேற்று நிராகரித்தார்.  இதையொட்டி இன்று டாக்காவில் உள்ள மத்தியச் சிறையில் முன்னால் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் கொலை வழக்கில் தொடர்பு உடைய முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் மஜித் தூக்கில் இடப்பட்டார்.