டாக்கா

ங்கதேசத்தின் பெண் எதிர்க்கட்சித் தலைவர் கலீதா ஜியா அளித்த ஜாமீன் மனுவை வங்க தேச உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வங்க தேசத்தின் எதிர்க்கட்சி தலைவியும் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா மீது ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கிய பணத்தை மோசடி செய்ததாக குற்றம் எழுந்தது.    மூன்று முறை பிரதமர் பதவி வகித்த ஜியாவுக்கு கடந்த மாதம் வங்க தேச நீதிமன்றம் ஐந்து வருட சிறைதண்டனை அளித்தது.   இந்த வருடம்  வங்க தேசத்தில் பொதுத் தேர்தல்கள் நடக்க உள்ளன.

அந்த தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக கலீதா ஜியா ஜாமீன் மனு ஒன்றை அளித்திருந்தார்.   ஆனால் வங்க தேச உச்சநீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து விட்டது.    இதற்கு கலீதா ஜியாவின் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஃபக்ருல், “இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதை விட அரசு ஜியாவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் ஒரு சதி என்பதே சரியானதாகும்”  என தெரிவித்துள்ளார்.

ஜியாவின் வழக்கறிஞர் சனவுலா மியா, “கலீதா ஜியாவின் குரலை அடக்க தற்போதைய பிரதமர் ஷேக் ஹசினா செய்யும் முயற்சிகளில் இந்த தீர்ப்பும் ஒன்று.   வங்க தேச சரித்திரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு இதுவரை அளிக்கப்பட்டதில்லை.   இது நீதிமன்ற முடிவு அல்ல,  அரசின் முடிவாகும்”  என தெரிவித்துள்ளார்