பங்களாதேஷ் அரசுடன் அதானி நிறுவனம் செய்துள்ள மின்சார உற்பத்தி மற்றும் விநியோக ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

கடந்த 2009 முதல் 2024 வரை அதானி நிறுவனம், சீன நிறுவனம் உள்ளிட்ட 7 நிறுவனங்களுடன் முந்தைய ஷேக் அசீனா தலைமையிலான அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்ய நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதானி நிறுவனத்திற்கு 800 மில்லியன் டாலர் கட்டணம் நிலுவையில் உள்ளதாக அந்நிறுவனம் கூறிவரும் நிலையில் டாலருக்கு நிகரான பங்களாதேஷ் ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தபோதும் 150 மில்லியன் டாலர் அதானி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மீதமுள்ள தொகையை முழுமையாக செலுத்த தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் கூறியுள்ளது.

இந்த நிலையில், ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டுள்ள பங்களாதேஷ் அரசு விரைவில் அந்த குழு இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது வழக்கு தொடரப்பட்டதை அடுத்து கென்யா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அதானி மேற்கொண்டு வரும் திட்டங்கள் சிக்கலை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யப்போவதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.