தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்ததாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
பாங்காக்கின் பிரபலமான பேக் பேக்கர் பகுதியான காவ் சான் சாலைக்கு அருகிலுள்ள எம்பர் ஹோட்டல் என்ற ஆறு மாடி ஹோட்டல் கட்டிடத்தில் இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐந்தாவது மாடியில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் சுற்றுலாப் பயணி பலியானார். மேலும் இரண்டு ஆண் சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்தனர்.
மேலும், 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் 7 தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு சோதனைக்காக ஹோட்டலை மூட உத்தரவிடப்பட்டுள்ளது மற்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுவாக அதிக பணம் செலவழிக்காமல், விலை அதிகமில்லாத இடங்களில் தங்கும் வகையில் ஒரே பையுடன் பயணிக்கும் நபர் பேக் பேக்கர் என்று அழைக்கப்படுகிறார்.
தாய்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக 20,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் இதுபோன்ற இடங்களில் குவிந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் தாங்கும் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது இவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.