நீர்வீழ்ச்சியில் விழுந்து வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் வந்த நபரை ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகில் உள்ளது ஜோக் பால்ஸ்.

இந்தியாவின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியான இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.

சமீபத்தில் ஜோக் பால்ஸ் வந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஆட்டோவில் ஏறி அந்த பகுதியில் சுற்றியுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனரிடம் அங்குள்ள அபாயகரமான மற்றும் உயரமான இடங்கள் பற்றி விசாரித்துள்ளார்.

வழக்கமாக சுற்றுலா பயணிகள் அழகான மற்றும் குளிப்பதற்கு ஏற்ற இடங்களை கேட்கும் நிலையில் இந்த பயணி வித்தியாசமான இடங்கள் குறித்து கேட்டதால் சந்தேகமடைந்த ஆட்டா ஓட்டுனர் இதுகுறித்து அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்ட உதவி ஆய்வாளர் நாகராஜ் அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்ததுடன் அவர் சாப்பிட்ட பின் காவல் நிலையத்தின் வெளியே அமரவைத்து பேச்சுக் கொடுத்துள்ளார்.

அப்போது அந்த நபர் தான் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் சிக்பெட் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

ஒரே ஆண்டில் தனது தாயும் தந்தையும் நோய்வாய்ப்பட்டதால் அவர்களுக்காக மருத்துவச் செலவு ஏற்பட்டுள்ளது தவிர அதே நேரத்தில் அவரது.மனைவியும் விவாகரத்து செய்து பிரிந்து செல்ல போதாக்குறைக்கு தொழிலும் நஷ்டமடைந்துள்ளது.

இதனால் 30 லட்ச ரூபாய்க்கு மேல் கடனாளியான தனக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்குதல் தந்ததை அடுத்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இங்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் நீ இறந்துவிட்டால் உனது தாய் தந்தையின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பார் என்று அறிவுரைத்த நாகராஜ் தற்கொலை எண்ணத்தை கைவிட வலியுறுத்தினார்.

மேலும் உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என்று கேட்ட நாகராஜிடம் அம்மா என்று கூறியதை அடுத்து அவரது தாய்க்கு போன் செய்த நாகராஜ் அந்த நபரை தனது தாயுடன் பேசச் சொல்லியுள்ளார்.

தாயின் குரலைக் கேட்டு தனது எண்ணத்தை முழுவதுமாக மாற்றிக் கொண்ட அந்த நபர் வீட்டிற்குத் திரும்ப நினைத்ததை அடுத்து.அவரது.தாயிடம் நடந்ததைக் கூறிய நாகராஜ் மகனை பஸ்ஸில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரிடம் 2000 ரூபாய் பணம் கொடுத்து பஸ் ஏற்றிவிட்ட நாகராஜ் அவருக்குத் தெரியாமல் டிரைவர் கண்டக்டரிடம் விவரத்தைக் கூறி பார்த்துக் கொள்ள கூறியுள்ளார்.

பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பிய அந்த நபர் நகராஜிடம் போன் செய்து பேசியதுடன் அவரது.தாயும் நன்றி தெரிவித்துள்ளார்.