பதான்கோட் பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான சில சர்ச்சைக்குரிய தகவல்களை தகவல் ஒளிபரப்பு விதிமுறைகளை மீறி ஒளிபரப்பியதாக என்டிடிவி- செய்தி சேனலுக்கு ஒருநாள் தடையை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தண்டனையாக அளித்துள்ளது.
இந்த உத்தரவின்படி வரும் நவம்பர் 9- அன்று என்டிடிவி ஒளிபரப்பாகாது என்று தெரிகிறது. பயங்கரவாதிகள் குறித்த செய்திகளை வெளியிடும்போது இனி மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஒரு செய்தி சேனலுக்கு ஒருநாள் தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து கருத்துக் கேட்க சேனலின் நிர்வாகத்தை அணுக முயற்சித்தபோது அவர்கள் இதற்கு பதிலளிக்கவிலை.
பதன்கோட் பயங்கரவாத தாக்குதல் குறித்து என்டிடிவி அளித்த செய்தியில் விமானப்படைத்தளங்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்கள் குவித்துவைக்கப்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை கசியவிட்டதாக மத்திய அரசு குற்றம்சாட்டியிருக்கிறது. இது தகவல் ஒளிபரப்பு விதிமுறைகளை மீறிய செயல் என்றும் இது போன்ற இராணுவ தகவல்களை பொதுவில் கசியவிடுவது பயங்கரவாதிகளுக்கும் அவர்களை இயக்குபவர்களுக்கும் சாதகமாக அமைந்துவிடுமென்றும், அவர்கள் இந்த தகவல்களை பயன்படுத்தி நாட்டுக்கும் மக்களுக்கும் ஊறுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இதை மறுக்கும் என்டிடிவி நாங்கள் புதிதாக எதையும் வெளியிடவில்லை, ஏற்கனவே சமூகவலைதளங்களிலும், அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பகிரப்பட்ட செய்தியைத்தான் நாங்களும் பகிர்ந்தோம் என்றும் விளக்கமளித்துள்ளது. அவர்கள் விளக்கத்தை ஏற்காத மத்திய அரசு என்டிடிவிக்கு ஒருநாள் தடையை தண்டனையாக அளித்துள்ளது.