டெல்லி:

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதையடுத்து, மாநிலங்களவைவில் ஓரிரு நாளில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம், விளம்பரம் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார்.  இந்த நிலையில், தற்போது அதற்கு தடை விதிக்கும் வகையில் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சிக்ரெட் புகைப்பதால், ஏராளமானோர் புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கு ஆளாகி வரும் நிலையில், அதை தடுக்கும் நோக்கில் இ.சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட் அறிமுகமானது.  பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும் இதனுள்  நிகோடின் திரவம் நிரப்பப்பட்டு இருக்கும். இது பேட்டரி மூலம் இயக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதை புகைப்பதால், புகை மற்றும் வாசனை ஏதும்  வராது என்று விளம்பரப்படுத்தப்பட்டு வந்தாலும், அதனுள் உள்ள நிகோடின் திரவம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நிகோடின்  புற்றுநோயை உருவாக்கும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அதேவேளையில், இ-சிகரெட்  உபயோகிப்போர் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. மேலும், இ-சிகரெட்டைப் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கினர். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், சுமார்  77 சதவிகிதம் மாணவர்கள் இ-சிகரெட்   உபயோகப்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இ-சிகரெட் மீதான தடையை மத்தியஅரசு அறிவித்தது. இந்த நிலையில், இ-சிகரெட் தடை தொடர்பான அவசர சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 18ந்தேதி ( 18-9-2019)  மத்திய அரசு பிறப்பித்தது. இதை சட்டவடிவமாக மாற்றுவதற்கான மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்கு பின்னர் இன்று நிறைவேற்றப்பட்டது.

இ-சிகரெட்டுக்கு ஏற்கனவே  சிங்கப்பூர், பிரேசில் போன்ற சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் வாசனையூட்டப்பட்ட இ-சிகெரெட் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.