நீதிமன்ற அனுமதியின்றி அக்டோபர் 1ஆம் தேதி வரை நாட்டில் எங்கும் புல்டோசர் நீதி என்ற பெயரில் சொத்துக்களை இடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டெல்லி, அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பெயரில் சிறுபான்மையினரின் வீடுகள் சமீப ஆண்டுகளாக தொடர்ந்து இடிக்கப்பட்டு வருவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
சட்ட விரோதமாக எந்தவொரு சொத்தையும் இடிப்பது நமது அரசியலமைப்பின் மதிப்புகளுக்கு எதிரானது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அனுமதியின்றி குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை இடிக்கக் கூடாது என்று நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
பொது சாலைகள், நடைபாதைகள் மற்றும் பிற இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டுமானங்கள் தவிர மற்ற கட்டிடங்களை இடிக்க தடை விதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை இந்தியா முழுவதும் நீதிமன்ற அனுமதியின்றி எந்தவொரு சொத்தையும் இடிக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.