2027 ம் ஆண்டுக்குள் பெரிய நகரங்களில் டீசல் வாகனத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் பயன்பாட்டை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் 25 சதவீதம் குறைக்கவேண்டும் என்றும் இந்திய எண்ணெய் குழு வலியுறுத்தியுள்ளது.
2021 ம் ஆண்டு பெட்ரோலிய துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்திய எண்ணெய் குழுவுக்கு இந்தியன் ஆயில் நிறுவன முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைவராக உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராகவும் உள்ள தருண் கபூர் தலைமையிலான இந்த குழு 2027 ம் ஆண்டுக்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்களில் அல்லது அதிக மாசு ஏற்படும் நகரங்களில் டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று பசுமை மாற்றம் என்ற தலைப்பில் அரசுக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் ஆட்டோ போன்ற வாகனங்களை 2035 ஆம் ஆண்டிற்குள் படிப்படியாக நிறுத்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து மாறுவது உலகளாவிய கச்சா தேவையைக் குறைக்கும், அதேவேளையில் மின்சார வாகனங்களை பயன்படுத்த்துவதில் இந்தியா சீனாவை விட பின்தங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
அரசு தரவுகளின்படி மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் நுகர்வில் டீசல் மற்றும் பெட்ரோலின் பங்கு பாதிக்கு மேல் உள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல், பெருநகரங்களில் மின்சார வாகனங்களைத் தவிர பிற வாகனங்களை விற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் வெளியானதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எண்ணெய் அமைச்சக செய்தித் தொடர்பாளர் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
2030 ஆம் ஆண்டுக்குள் 25% வீடுகள் சமையலுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான இலக்கு உள்ளிட்ட பிற பரிந்துரைகளை குழு வழங்கியுள்ளது இதன்மூலம் எரிவாயு பயன்பாடு பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.