மீரட்
இந்துக்கள் மொபைல் ஃபோன் வாங்கக் கூடாது, துப்பாக்கி வாங்க வேண்டும் என இந்து மத அமைப்பான பஜ்ரங் தள் கூறி உள்ளது.
மீரட்டில் சந்த் சமாஜ் சம்மேளன் என்னும் ஒரு நிகழ்வு நடந்தது. அதில் இந்து மத அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பின் வட்டார கூட்டமைப்பாளர் பால்ராஜ் சிங் துங்கர் உரையாற்றினார். அவருடன் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேவேந்திர மிஸ்ரா உட்பட பல இந்து அமைப்புத் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
பால்ராஜ் தனது உரையில், “தற்போது இந்து மதத்தை அழிக்க பல தீய சக்திகள் கிளம்பி உள்ளன. அவைகளிடம் இருந்து பஜ்ரங் தள் தொண்டர்கள் நமது மதத்தை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. உங்களுக்கு உண்மையாகவே நமது இந்து மதத்தை காக்கும் எண்ணம் இருந்தால் மொபைல் ஃபோன் வாங்காமல் துப்பாக்கி வாங்க வேண்டும்.
இந்து மதத்தில் இறைவனும் இறைவியும் ஆயுதங்கள் வைத்திருப்பது இந்த சமுதாயத்தை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகத் தான். இந்துக் கடவுளர்கள் ஆயுதம் வைத்திருக்கும் போது இந்துக்கள் வைத்துக் கொண்டால் என்ன தவறு? இந்த ஆயுதங்கள் யாரையும் தாக்குவதற்காக வைத்துக் கொள்ள வேண்டாம். நமது பாதுகாப்புக்கு வைத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துக் கொண்டுள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத் செயலாளர் தேவேந்திர மிஸ்ரா, “மாநிலம் எங்கும் பஜ்ரங் தள் அமைப்பில் ஆள் சேகரிப்பு முகாம் துவங்க வேண்டும். அனைவரும் பொழுது போக்கு மையங்களை விடுத்து அனுமன் கோவிலுக்கு செல்ல வேண்டும். பஜ்ரங் தள் அமைப்பில் இஸ்லாமியரை இணைக்க வேண்டாம். அவர்கள் சேர விரும்பினால் ஆர் எஸ் எஸ் இஸ்லாமிய அமைப்பான ராஷ்டிரிய முஸ்லிம் மன்ச் அமைப்பில் இணைந்துக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.