அயோத்தியில் கோவிலை இடித்து தான் மசூதி கட்டப்பட்டது என்றும், இடிக்கப்பட்ட கோவிலின் பொருட்களே மசூதியின் சுவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் முகமது தெரிவித்துள்ளார்.

அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. சுமார் 40 நாட்கள் தொடர் விசாரணைக்கு பின்னர், கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் படி, நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அங்கு ராமர் கோவில் கட்டிக்கொள்ளவும், அதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், அயோத்தியிலேயே வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும், தேவை ஏற்படுமெனில் மாநில அரசுடன் கலந்தாலோசித்து ஒதுக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் சூழலில், அயோத்தியில் கோவில் இடிக்கப்பட்டே மசூதி கட்டப்பட்டதாக, வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய தொல்பொருள் ஆராய்ச்சி அறிக்கையை சமர்பித்த முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் கே.கே அகமது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும், உண்மையை ஆய்வு செய்து சொன்னேன். அதற்காக என்னை அப்போது இருந்த மாநில அரசு சார்பில் பலர் பல்வேறு ரீதியில் தொல்லைகளை கொடுத்தனர். மத்தியில் இருந்தவர்களும் எனக்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்தனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக எதையும் சொல்லக்கூடாது என மாநில ஆட்சியில் இருந்தவர்கள் எனக்கு உத்தரவுகளை எல்லாம் போட்டனர். எனது பணியை சரிவர செய்ய விடாமல் தடுத்தனர். ஆனாலும் கடினமான இப்பணியை வெற்றிகரமாக முடித்தோம்.

உண்மையில் இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு தான் சிறப்பான ஒன்று. இதனை நான் முழுமனதோடு வரவேற்கிறேன். கோவில் இடிக்கப்பட்டு தான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட கோவிலின் பொருட்களையே மசூதி சுவர் கட்ட பயன்படுத்தியுள்ளனர். இது ஆய்வுகளில் தெளிவாக தெரிந்தது. இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்து கோவிலை இடித்தது உண்மை தான். இதை அப்போது நான் ஆய்வு செய்து சொன்னபோது, என் மீது பலரும், பல விதமான விமர்சனங்களை முன்வைத்தனர். தவறு யார் செய்திருந்தாலும், அதை ஆராய்ந்து சொல்லவேண்டியது என் கடமை. அதை நான் செய்தேன்.

சில ஆட்சியாளர்களின் தவறான செயலை ஒருவர் நியாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. தற்போது உண்மையின் அடிப்படையில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதை அங்குள்ள அனைத்து மக்களும் ஏற்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.