சென்னை,
ரஜினி, தான் நடித்துள்ள பாபா படத்தில் இருந்து, இரண்டு விரலை உயர்த்தியபடி உள்ள பாபா முத்திரையை பயன்படுத்தி வருகிறார். இதை அவரது ரசிகர்களும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் அரசியல் அறிவிப்பு செய்த ரஜினி, தனது வலைதளம் மற்றும் மொபைல் செயலியிலும் பாபா முத்திரை பயன்படுத்தி வந்தார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாபா முத்திரையை உபயோகப்படுத்தி வரும் மும்பையை சேர்ந்த வாக்ஸ்வெப் என்ற சமூக நெட்வொர்க் நிறுவனம், தங்களது நிறுவனத்தின் லோகோவான பாபா முத்திரையை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என்று ரஜினிகாந்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பாபா முத்திரைக்கு பதிலாக என்ன பயன்படுத்தலாம் என அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ரஜினியின் அரசியல் பயணத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற இணையதளத்தை மக்கள் மன்றம் என்று மாற்றி உள்ளார். மேலும், பாபா முத்திரையின் கீழே இருந்த தாமரை, ரஜினி பாஜகவுக்கு ஆதரவாளர் என்ற விமர்சனம் காரணமாக அது உடடினயாக அகற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது பாபா முத்திரைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாபா முத்திரை ரஜினி நடித்த பாபா படத்தில் இருந்து ரஜினி உபயோகப்படுத்தி வருகிறார். அதே வேளையில், மும்பை நிறுவனம் கடந்த 18 மாதங்களாக இந்த சின்னத்தை தனது அதிகாரப்பூர்வ லோகாவாக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பாபா முத்திரை யாருக்கு என்பது குறித்து விரைவில் நீதிமன்றத்தை நாட ரஜினி தரப்பில் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.