பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தேசிய வங்கி ஊழியர் சங்க செயலாளர் வெங்கடாசலம் கடிதம் எழுதியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் உள்ள பி.எம்.சி வங்கியில் நடந்த கடன் மோசடி காரணமாக, கடன் வழங்குதல் மற்றும் சேமிப்பு பெறுவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளது. இந்த நிலையில் பி.எம்.சி வங்கி தொடர்பாக தேசிய வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் வெங்கடாசலம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”பி.எம்.சி வங்கியின் வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் என்பதால் தங்கள் நல்வாழ்வுக்கான சேமித்த தொகையை எடுக்க முடியாமல் அவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 6 மாதத்தில் ரூ. 40 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்கலாம் என்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். மேலும், இந்த வங்கியை ஏதாவது ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். மஹாராஷ்டிரா மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் தீவிர பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. அவற்றின் மீதும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.