நாக்பூர்
ஆக்சிஸ் வங்கி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸுக்கு மும்பை உயர்நீதிமன்றக் கிளை நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸ் மனைவி அம்ருதா ஃபட்நாவிஸ் மகாராஷ்டிரா ஆக்சிஸ் வங்கியின் துணைத் தலைவராகப் பணி ஆற்றி வருகிறார். மகாராஷ்டிர மாநில காவல்துறை ஊழியர்களின் ஊதிய வங்கிக் கணக்கு தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்தது. அதை தேவேந்திர ஃபட்நாவ்ஸ் முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றினார்.
இதனால் ஆக்சிஸ் வங்கியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் செலுத்தப்பட்டது. ஆக்சிஸ் வங்கி வருடத்துக்கு ரூ.11000 கோடிக்கு மேல் கையாள தொடங்கியது. இந்த நடவடிக்கை ஃபட்நாவிஸ் மனைவிக்காக நடத்தப்பட்டதாக நாக்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தார்.
தேவேந்திர ஃபட்நாவிஸ் பதவி இழந்த பிறகு இது குறித்து மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு பதியப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்சிஸ் வங்கிக்கு காவல்துறை ஊதிய கணக்குகளை மாற்றியது ஏன் எனக் கேள்வி எழுப்பி உள்ளது.
இது குறித்து 8 வாரங்களுகுள் விளக்கம் அளிக்க தேவேந்திர ஃபட்நாவிஸ், அரசின் உள்துறை தலைமைச் செயலர், காவல்துறை டிஐஜி ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் வேட்பு மனுவில் கிரிமினல் வழக்குகளை மறைத்ததற்காக வழக்கை எதிர் கொள்ள இருக்கும் ஃபட்நாவிஸுக்கு இது மற்றொரு தலைவலியை அளித்துள்ளது.