சிக்மகளூரு: ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் பங்களிக்காமல், கர்நாடகாவின் சிக்மகளூரு பகுதிக்கு சுற்றுலா சென்ற நபர்களுக்கு, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தன்னார்வ குழுக்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களைச் சேர்ந்த பலர், பல வாகனங்களில், சிக்மகளூரு பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அவர்களை, இந்தக் குழுவினர் இடைமறித்து, எதற்காக வாக்களிக்கவில்லை என கேட்டபோது, அது தங்களின் விருப்பம் என்று அவர்கள் கூறினர்.
அப்போது, அரசு ஆவணங்களால் செய்யப்பட்ட மாலையை, வாக்களிக்காத நபர்களுக்கு அணிவித்து, அரசிடமிருந்து அனைத்து சலுகைகளையும் பெறும்போது, வாக்களிப்பது எவ்வளவு முக்கியம்! என்று எடுத்துரைத்தனர்.
சிலர், இன்றுதான் வாக்குப்பதிவு நாளா? என்றும்கூட கேட்டனர். எனவே, அவர்களின் ஜனநாயக கடமையின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. எந்த வேட்பாளரையும் அல்லது கட்சியையும் பிடிக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் நோட்டாவிற்கேனும் வாக்களிக்கலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
– மதுரை மாயாண்டி