கோவை: மாணவர்களுக்கு பள்ளி பருவத்திலேயே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இது ஆசிரியர்கள் நினைத்தால் சாத்தியமாகும் என்றார்.
சாலை விதிகள் குறித்து பள்ளி பருவத்திலேயே விழிப்புணர்வு தர வேண்டும் என சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தினார்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ‘உயிர்’ எனும் சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் மாநகராட்சி இணைந்து ‘உயிர் குட்டி காவலர் சாலை பாதுகாப்பு பாடத்திட்டத்ததை’ வடிவமைத்துள்ளார்கள். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் விழா நேற்று (ஜுன் 12) கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேடு வெளியீடப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேட்டை வழங்கினார். மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேட்டை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ், “சாலை பாதுகாப்பு குறித்தும், சாலையில் வாகனம் ஓட்டும் பொழுதும், சாலையில் நடந்து செல்லும் பொழுதும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். மேலும் சாலை விதிகள் குறித்து பள்ளி பருவத்திலேயே விழிப்புணர்வு தர வேண்டும் என்ற விதத்தில் இந்த திட்டதை கொண்டு வந்துள்ளோம்.
ஆசிரியர்களும் மாணவர்களும் நினைத்தால் இதனை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். சாலை விதிகளை பின்பற்றுவது வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் பொருந்தும்” என்றார். மேலும் பேசிய அவர், ” வெளியூர் செல்லும் பொழுது எப்படி நம் பொது போக்குவரத்தை பயன்படுத்துகிறோமோ, அது போன்று நம் ஊரில் இருக்கும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் இது போன்று விஷயங்களுக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியில் குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.