டெல்லி: விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, சுகாதார பணியாளர்கள், முன்கள ஊழியர்கள், மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந் நிலையில் கொரோனா தடுப்பூசியின் அடுத்த கட்டமாக, சிவில் விமான போக்குவரத்து துறையில் இருப்போருக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 20ம் தேதி சிவில் விமான போக்குவரத்து துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷணுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:
விமான போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்ற விடாமுயற்சியுடன் பலரும் உழைத்து வருகிறார்கள். எனினும், உள்நாட்டு பயணங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் மேற்கொள்ளும் பயணத்தால் தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு.
எனவே, தடுப்பூசி வழங்குவதற்கான முன் களப்பணியாளர்கள் பட்டியலில் விமான நிலையத்தில் பணிபுரிகிறவர்கள், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களையும் சேர்க்க வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் ஊழியர்கள் பற்றிய விவரங்களை வழங்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கோரிக்கை ஏற்கப்பட்டு விமான போக்குவரத்து துறையினரும் முன்கள பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது.