புதுடில்லி:
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு விமான போக்குவரத்து துறை சரிவிலிருந்து மீளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திடீர் ஊரடங்கு அறிவிப்பால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், அதன் ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். சிலர் பணி நீக்கமும், சம்பள பிடித்தமும் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சரக்கு விமானங்களும், சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் சூழலில், கடந்த பிப்., மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாத விமான போக்குவரத்து நுகர்வு 14.1 சதவீதமாக குறைந்துள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. இது மோசமான சரிவு எனவும் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடி, முதல்வர்களுடன் ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக உரையாடிய போது, உள்கட்டமைப்பு துறையில் தளர்வு அனுமதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். எனவே விவசாய துறை, உணவு பதப்படுத்துதல், விமான போக்குவரத்து, மருந்துகள், தொழில்கள், கட்டுமானம் உள்ளிட்ட துறைக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.