
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். மாதம்தோறும் அவர் வாரணாசி தொகுதிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அவர் இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக இன்று வாரணாசி தொகுதிக்கு சென்றார்.
டெல்லியில் இருந்து தனி சிறப்பு விமானத்தில் பபத்பூர் விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பல்லியா எனும் பகுதியில் சென்றார்.
அங்கு அவர், “நாடெங்கும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கான இலவச சமையல் கியாஸ் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி நாடெங்கும் 5 கோடி ஏழைகள் பலன் பெறுவார்கள்”.
பல்லியா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வாரணாசி திரும்பி வந்தார். அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொண்டு ஆயிரம் பேருக்கு இ–ரிக்ஷாக்களை வழங்கினார். இதையடுத்து பிரதமர் மோடி சம்னேகாட் பகுதியில் உள்ள “ஜனபிரவாகா” எனும் கலாச்சார மையத்துக்கு செல்கிறார். அந்த மையத்தை சுற்றி பார்க்கிறார்.
இறுதியாக பிரதமர் மோடி கங்கை நதிக்கரையில் உள்ள அஸ்சிகாட் பகுதிக்கு செல்லஉள்ளார். அங்கு சூரிய சக்தியால் இயங்கும் படகுகளை போக்குவரத்துக்கு தொடங்கி வைக்கிறார்.
கங்கையில் தற்போது டீசலால் இயங்கும் மோட்டார் பொருத்திய படகுகள் பயன்படுத்தப்படுகிறது. அதிக டீசல் புகை காரணமாக கங்கையில் மாசு ஏற்படுகிறது. அத்தகைய புகை மாசை கட்டுப்படுத்த இ–படகுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கங்கையில் இயக்கப்படும் அனைத்து படகுகளையும் இ–படகுகளாக மாற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel