modi
கேரள சட்டசபைக்கு வருகிற 16–ந்தேதி தேர்தல் நடக்கிறது. வழக்கமாக இங்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இடையேதான் போட்டி நிலவும். இந்த இரு கூட்டணிகள் தான் மாநிலத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்தன.
இம்முறை பாரதீய ஜனதா கட்சியும் போட்டியில் குதித்துள்ளது. கேரளாவில் ஈழவ சமுதாயத்தை சேர்ந்த எஸ்.என்.டி.பி. அமைப்பின் தலைவர் வெள்ளாப்பள்ளி நடேசன் தொடங்கிய பாரதீய தர்ம ஜனசேனா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 3–வது அணியாக களம் இறங்கி உள்ளது.
இதனால் கேரள அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் இக்கூட்டணிக்கு கணிசமான வெற்றி கிடைத்தது. இது சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் நம்புகிறார்கள். எனவே அவர்கள் முழு மூச்சுடன் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த ஆய்வில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு கேரளாவில் 9 இடங்கள் கிடைக்கும் என்றும், முதல் முறையாக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்லும் வாய்ப்பு கனிந்துள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் வெளியானது.
இதையடுத்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, கேரளாவிற்கு சென்று தேர்தல் பணிகளை முடுக்கி விட்டார். மேலும் வருகிற 1–ந்தேதி முதல் மத்திய மந்திரிகளை களம் இறக்கி சூறாவளி பிரசாரம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், வெங்கைய்யா நாயுடு, ஸ்மிருதி இராணி, சதானந்தாகவுடா ஆகியோர் கேரளாவில் முகாமிட்டு பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.
இதற்கு முத்தாய்ப்பாக பிரதமர் நரேந்திர மோடியும் கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதனை கேரள மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் கும்மனம் ராஜசேகர் தெரிவித்தார். அவர் கூறும்போது, பிரதமர் நரேந்திரமோடி வருகிற 6–ந்தேதி முதல் 11–ந்தேதி வரை 5 நாட்கள் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மேலும் திருவனந்தபுரம், காசர்கோடு, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய நகரங்களில் தேர்தல் பிரசார பேரணியையும் தொடங்கி வைப்பார் என தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பாரதீய ஜனதா கட்சிக்கு பிரபல நடிகர் சுரேஷ்கோபி ஆதரவு திரட்டி வருகிறார். இக்கூட்டணியின் வேட்பாளர்களாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திருவனந்தபுரம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை தவிர முன்னாள் மத்திய மந்திரி ஓ. ராஜகோபால், கட்சியின் மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், முரளீதரன், கிருஷ்ணதாஸ், ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோரும் களம் இறங்கி உள்ளனர்.
காங்கிரஸ்–கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளுக்கு இணையாக பாரதீய ஜனதாவும் கடும் போட்டியை ஏற்படுத்தி இருப்பது அரசியல் அரங்கில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது.