ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில், 64 கோடி ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, தற்போது, 113 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட போது, ஜெயலலிதா மீது, 10 வழக்குகள் இருந்தன. அப்போது அசையும் சொத்துக்களின் மதிப்பு, 13.03 கோடி ரூபாய்; அசையா சொத்துக்களின் மதிப்பு, 51.40 கோடி ரூபாய். இவற்றின் மொத்த மதிப்பு, 64.43 கோடி ரூபாய்.
வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். சொத்து விவரங்களை குறிப்பிடும் போது கையில் உள்ள ரொக்கம், வங்கியில் உள்ள பணம், வாகனங்கள், தங்க நகைகள் போன்றவை, அசையும் சொத்தில் இடம்பெறும். நிலம், கட்டடம் போன்றவை, அசையா சொத்தில் இடம்பெறும். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த போது இவ்விவரங்கள் தெரிய வந்தன.
சொத்து விவரம்:
*ஜெயலலிதா கையில் ரொக்கமாக, 41 ஆயிரம் ரூபாய் உள்ளது.
*அவர் பெயரில், ஒன்பது கார்கள் உள்ளன
*அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 41.63 கோடி ரூபாய்
*அசையா சொத்துக்களின் மதிப்பு, 72.09 கோடி ரூபாய்
*இவற்றின் மொத்த மதிப்பு, 113.73 கோடி ரூபாய்
* ஜெயலலிதா பெயரில், ஐந்து வழக்குகள் உள்ளன
* அவரது பெயரில் கடன், 2.04 கோடி ரூபாய் உள்ளது.