ki.veee
சேலம் மகுடஞ்சாவடியில் ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். விருத்தாசலம் நிகழ்வு மூலம் பாடம் கற்றிருக்க வேண்டாமா? ‘தாயுள்ள முதல்வரின்’ பிரச்சாரத்தில் உயிர்ப் பறிப்புகள் நியாயமா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக தேர்தல் பரப்புரை செய்வது அவரது கடமை; அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், கொளுத்தும் வேகாத வெயிலில் காலை முதலே பல்வேறு ஊர்களிலிருந்து, பெண்களையும், ஆண்களையும், பேருந்துகளிலும், லாரிகளிலும், வேன்களிலும் ஏற்றி, அவர்களுக்கு தர வேண்டியவைகளை தந்து, பல மணி நேரம் வெய்யிலில் கால்நடைகளைப் பட்டியில் அடைத்து வைப்பது போன்று அடைத்து வைத்து; முதல் அமைச்சர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி அந்திசாயுமுன் வெளிச்சத்தில் வீடு திரும்ப வேண்டும் என்ற அவசியத்தால், உரையாற்றுவது எவ்வளவு மனிதநேயத்திற்கு மாறான கொடுஞ் செயல்!
‘கோடை வெப்ப அலைகள், அதிகம் வெளியே வராதீர்கள்’ என்று மாவட்ட அதிகாரிகள் மக்களுக்கு ஒருபுறம் அறிவுரை; மறுபுறம் இந்த ‘ஆட்களை’ ஆடு மாடுகள்போல் பல மணி நேரம் அடைத்து வைத்து, காவல் துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கச் செய்தது நியாயம் தானா? விருத்தாசலத்தில் 2 பேர் சாவு, பலரும் உடல் நலப் பாதிப்பு, அருப்புக்கோட்டையில் பெண் எஸ்.அய். உட்பட மயக்கம், நேற்று சேலம் மகுடஞ்சாவடி தேர்தல் பிரச்சாரத்தில் 2 பேர் சாவு என்று மனித உயிர்கள் இப்படி பாதுகாப்பின்றி, மலிவாகப் பறிக்கப்படலாமா?
அதற்கு ஒரு முதல் அமைச்சரின் பரப்புரை காரணமாகலாமா?
திருவிழா, நெரிசலில் இறந்தால்கூட விசாரணைக் கமிஷன் கேட்போர் பலர் வாயடைத்து உள்ளனர்! ஏடுகளில், ஊடகங்களில் இதுபற்றி செய்தி வெளியிடுவதற்கேகூட அச்சம், தயக்கம்!
‘உடல் நலமின்றி இறந்தார்கள்’ என்று வெகு சாதாரணமாக முதல்வர் கூறுவது மனிதநேயமற்ற – இரக்கமற்ற எண்ணத்தின் வெளிப்பாடல்லவா?
யார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்? தேர்தல் கமிஷன் என்ன கூறுகிறது? அது காவல்துறையின் பொறுப்பு எங்களுடையது அல்ல என்று கைவிரிக்கிறது!
மனித உயிர்களுடன் இப்படியா விளையாடுவது? சில லட்சங்களை வீசி விட்டால் மாண்டவர்கள் மீண்டு விடுவரோ!
என்னே விசித்திரத் தேர்தல் கூத்து!
நாம் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விருத்தாசலம் நிகழ்வு மூலம் பாடம் கற்றிருக்க வேண்டாமா? மீண்டும் மீண்டுமா? இப்படி இழப்புகள் – பலிகள் – தொடருது!