மெல்பெர்ன்: கொரோனா வைரஸ் பரவலுக்கு மூலகாரணமாக இருந்த சீன நாட்டு மாமிச சந்தைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன்.
அவர் பேசியிருப்பதாவது, “இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், முதன்முதலாக சீனாவின் வூஹான் நகரில்தான் பரவத் தொடங்கியது. இதுவரை 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பலியாகியுள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் சீனாவி்ன் வெட் மாமிச சந்தைகளுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சீனாவின் மாமிச சந்தைகள் உலக நாடுகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக உள்ளன” என்றுள்ளார் அவர்.
கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு தன்னை குறைசொல்லும் உலக நாடுகள், பிற நாடுகளில் பல்வேறு வைரஸ்கள் தோன்றி பரவத் தொடங்கியபோது, அந்நாடுகளை இப்படி குற்றம் சுமத்தவில்லை என்று சீன தரப்பில் ஏற்கனவே கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.