மும்பை: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 256 ரன்கள் என்ற இலக்கை, ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட் வெற்றியைப் பெற்றது ஆஸ்திரேலியா.
37.4 ஓவர்களிலேயே 258 ரன்களை எட்டி 74 பந்துகளை மிச்சம் வைத்தது ஆஸ்திரேலிய அணி. துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 128 ரன்களையும், கேப்டன் ஆரோன் ஃபின்ச் 110 ரன்களையும் அடித்து வேறு பேட்ஸ்மென்களுக்கு வேலையே இல்லாமல் செய்துவிட்டனர்.
பும்ரா, ஷமி உள்ளிட்ட வேகங்களும் சரி, ஜடேஜா போன்ற அனுபவசாலிகளும் சரி, ஒரு விக்கெட்டைக்கூட எடுக்க முடியாமல் திண்டாடிப் போயினர். அனுபவசாலிகளின் பந்துகள் ஆஸ்திரேலியர்களால் பிய்த்து எறியப்பட்டன.
வான்கடே மைதானம் சேஸிங் செய்வதற்கு ஒத்துழைக்கும் என்ற போதிலும், இந்திய அணி பெற்றிருப்பது மோசமான தோல்வியாகவேப் பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலவீனங்களை ஆஸ்திரேலிய அணி வெளிக்கொண்டு வந்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபநாட்களில் பலவீனமான அணிகளை வென்று தன்னை வெற்றியாளராக காட்டிக்கொண்டதா? என்ற விமர்சனமும் கிளம்பியுள்ளது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் 20 கூடுதல் ரன்களை வாரி வழங்கினர்.
நன்றாக ரன் அடித்து 300க்கு மேல் இலக்கை நிர்ணயித்திருக்க வேண்டிய இந்திய பேட்ஸ்மென்கள் பொறுப்பற்று ஆடினர் அல்லது திணறினர் என்றே சொல்ல வேண்டும். அடுத்தப் போட்டியில் சுதாரித்து, தாங்கள் திறமையானவர்கள் என்பதை நிரூபிப்பார்களா இந்திய அணியினர்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.