பெங்களூரு: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 287 ரன்களை, இந்தியா கோப்பை வெல்வதற்கான இலக்காக நிர்ணயித்துள்ளது.
கடந்த 2 போட்டிகளிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, மூன்றாவது போட்டியிலும் டாஸ் வென்றது. ஆனால், இந்தமுறை எதற்கு வம்பு என்று, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
டேவிட் வார்னரும் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சும் இந்தமுறையும் ஸ்ட்ராங் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. ஆனால், அடுத்துவந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆகிய இருவரும் ஸ்கோரை பெரியளவிற்கு எடுத்துச் செல்வார்கள் என்று நினைக்கும் வகையில் ஆடினார்கள்.
இருவருமே அரைசதம் கடந்த ஆடிவந்தனர். இறுதியில், 54 ரன்களுக்கு மார்னஸ் விடைகொடுக்க, அதன்பிறகு ஸ்மித்திற்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை.
அதன்பிறகு வந்தவர்களில் அலெக்ஸ் கேரி மட்டுமே 35 என்ற சுமாரான எண்ணை எட்டினார். மற்றபடி, ஆஷ்டன் ஆகரைத் தவிர, வேறுயாரும் இரட்டை இலக்கத்தையே எட்டவில்லை.
நிலைமை இப்படி போனாலும், ஸ்மித் சளைப்பதாக இல்லை. கடந்தமுறை 2 ரன்களில் சதத்தை நழுவவிட்டாலும், இந்தமுறை மனிதர் உஷார்! 132 பந்துகளை சந்தித்து 131 ரன்களை அடித்துவிட்டே பெவிலியன் திரும்பினார்.
கடைசிகட்ட எழுச்சி கண்ட இந்தியாவின் முகமது ஷமி, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவிற்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. பும்ரா வழக்கம்போல் எகனாமிக்காக வீசினார். ஆனால், விக்கெட் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.
எப்படியும் 300ஐ தாண்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடு களமிறங்கிய ஆஸ்திரேலியாவால் எடுக்க முடிந்தது 286 ரன்கள்தான்.