30 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி வயலை நிர்மாணிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக ஆஸ்திரேலியாவை நிலைநிறுத்துவதாதற்கான இந்த முக்கிய நடவடிக்கைக்கு ஆஸி. அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் உற்பத்தியாகும் இந்த சோலார் மின்சாரத்தை கடலுக்கு அடியில் கேபிள் மூலமாக சிங்கப்பூருக்கு வழங்க இருப்பதாக அந்நாட்டு சுற்றுசூழல் அமைச்சர் தன்யா பில்பெர்ஸ்க் தெரிவித்துள்ளார்.

12,000 ஹெக்டேர் (29,650-ஏக்கர்) நிலப்பரப்பில் இந்த ஆஸ்திரேலியா-ஆசியா பவர் லிங்க் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆஸ்திரேலியாவின் அதிக வெயில் உள்ள பகுதியான வடக்கு பிராந்தியத்தில் இதனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான SunCable நிறுவனம் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துரையின் கோடீஸ்வரரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான மைக் கேனான்-ப்ரூக்ஸ் இந்த திட்டத்திற்கு ஆதரவாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

2027ம் ஆண்டு இதற்கான நிதி ஒதுக்கீட்டு உள்ளிட்ட திட்டங்களுக்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும் என்றும் 2030ம் ஆண்டு இதன் முதல் மின் விநியோகம் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வரை சுமார் 4500 கி.மீ. தூரத்திற்கு கடலுக்கு அடியில் கேபிள் மூலம் மின் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.