சிட்னி: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களைக் குவித்தது.
பின்னர், கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, எதுவும் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. முக்கிய பேட்ஸ்மென்கள் கைகொடுக்காமல் போன நிலையில், கேப்டன் கோலியும், கேஎல் ராகுலும் மட்டுமே அரைசதங்களை அடித்தனர்.
ஆனால், யாருமே அதிரடியாக ஆடவில்லை. கடந்தமுறை சிறப்பாக செயல்பட்ட பாண்ட்யா, இந்தமுறை 31 பந்துகளில் 28 ரன்களை மட்டுமே அடித்தார். ஜடேஜா 11 பந்துகளில் 24 ரன்களை அடித்தார்.
இதனால், இந்திய அணி 50 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் மட்டுமே எடுத்து 51 ரன்களில் தோற்றது.
ஆஸ்திரேலியா தரப்பில், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஸம்பா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சு எடுபடவில்லை. 9 ஓவர்கள் வீசிய அவர் 82 ரன்களை வாரிக் கொடுத்தார். ஆனால், விக்கெட் இல்லை.
இத்தோல்வியின் மூலம், ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது இந்திய அணி. இந்திய அணி தனது பந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.