புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை தண்டிக்க வேண்டாமென்று உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார் இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலான கே.கே.வேணுகோபால்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிரஷாந்த பூஷன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், இன்னும் தண்டனை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், பூஷனுக்கு எந்த தண்டனையும் வழங்க வேண்டாமென அட்டர்னி ஜெனரல் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்விடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
“பிரஷாந்த் பூஷன் சமூகத்திற்கு பல நல்ல செயல்களை ஆற்றியுள்ளார். எனவே, கனம் கோர்ட்டார் அவர்களே, அவரை தண்டிக்க வேண்டாமென நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரஷாந்த் பூஷன், மக்கள் நலனுக்காக பல வழக்குகளை வாதாடியுள்ளார் என்பதை உச்சநீதிமன்றமும் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, தண்டனை அறிவிக்கும்போது அவையும் கணக்கில் எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.