டில்லி:

முறையான அனுமதி இல்லாமல் எந்த ஜிஎஸ்டி துறையும் அதிகாரியும் வர்த்தகர்கள், வியாபாரிகளின் நிறுவனங்களுக்கு நேரில் செல்லக்கூடாது. ஹெல்ப்லைனுக்கு வரும் புகார்களின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி அதிகாரிகள் என்ற பெயரில் சில சமூக விரோதிகள் கடைகளுக்கு சென்று முறைகேடு புகார்களை கூறி பணம் பிடுங்கும் செயல்களில் ஈடுபடுவதாக வந்த புகார்களை தொடர்ந்து மத்திய அரசு இந்த புது உத்தரவை வெளியிட்டுள்ளது.

டில்லி மண்டல ஜிஎஸ்டி தலைமை கமிஷனர் கூறுகையில்,‘‘ துறையின் எந்த அதிகாரியும் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளின் கடைகளுக்கோ, நிறுவனத்திற்ககோ உரிய அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது. ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களை மட்டுமே தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் நடந்தால் 011-23370115 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ‘‘ஜிஎஸ்டி விலை கண்டுபிடிப்பான்’’ என்ற புதிய மொபைல் செயலியை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிமுகம் செய்துள்ளார்.

இது ஆந்த்ராய்டு மொபைல்களில் கிடைக்கும். இதில் பல சரக்கு மற்றும் சேவைகளின் ஜிஎஸ்டி குறித்து அறிய உதவும். இதை எந்த ஸ்மார்ட் போன்களிலு டவுன்லோடு செய்து கொள்ளலாம். இணைய தொடர்பு இல்லாத சமயங்களிலும் இதை பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர் இதில் அமைக்கப்பட்டுள்ள தலைப்புகள் மூலம் எந்த பொருள், சேவைக்கு எவ்வளவு ஜிஎஸ்டி என்பதை அறியமுடியும்.

இதில் உள்ள தேடுதல் பகுதியை தேர்வு செய்து குறிப்பிட்ட பொருளின் பெயரை டைப் செய்தால் விபரம் தெரியவரும். குறிப்பாக ஒரு ஓட்டல் அல்லது ரெஸ்டாரென்ட் அல்லது செருப்பு கடைகளில் கொள்முதல் செய்யும் போது வழங்கப்படும் பில் தொகையை இதில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த ஜிஎஸ்டி விலை கண்டுபிடிப்பான் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை இணையளத்திலும் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேடுதல் பொருள் அல்லது சேவை அல்லது ஹெ ச்எஸ்என் கோடு அல்லது தலைப்பு எண் மூலம் மேற்கொள்ளலாம்.

இந்த முயற்சி ரெடிரெக்னர் போல் ஜிஎஸ்டி.யை அறிய ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோருக்கு மட்டுமின்றி அனைத்து குடிமகன்களும் ஜி.எஸ்.டி அளவை தெரிந்துகொள்ள முடியும்.