இஸ்ரேலின் சீசரியா நகரில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான ஓய்வு இல்லம் மீது லெபனான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல்லைக்கு 70 கிலோ மீட்டர் முன்னதாக உள்ள இந்த நகரில் பிரதமரின் ஓய்வு இல்லம் மீது நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் இஸ்ரேல் ராணுவத்தின் பலவீனத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.
அதேவேளையில், இந்த தாக்குதலை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான கொலை முயற்சியாக இஸ்ரேல் ராணுவம் கூறிவருகிறது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் எல்லைக்குள் 70 கி.மீ. வரை சென்று லெபனான் டிரோன் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் படுகொலையை இஸ்ரேல் ராணுவம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீதான இந்த தாக்குதல் இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 3 ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இதை திசை திருப்ப நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம் ஒரு ட்ரோன் பிரதமர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய நிலையில் மற்ற இரண்டு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் லெபனானின் இந்த ட்ரோன் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் அபாய சைரன் ஒலிக்காதது குறித்து இஸ்ரேல் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.