பிரபல யூ டியூபரும் அதிமுக விசுவாசியுமான சவுக்கு சங்கரின் தாயார் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் சவுக்கு சங்கர் தாக்குதல் நடத்தியவர்கள் தனது தாயாரின் செல்போனை பிடுங்கி தன்னிடம் பேசியதாகக் கூறியுள்ளார்.

மேலும், துப்புரவு தொழிலாளர்கள் என்ற பெயரில் 50 பேர் கொண்ட கும்பல் இன்று காலை 9:30 மணியளவில் தனது வீட்டை முற்றுகையிட்டதாகவும் இந்த முற்றுகை 11:45 மணி வரை நீடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தவிர, தனது தாயாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள சங்கர், வீட்டிற்கு வரவேண்டாம் என்று தன்னை காவல்துறையினர் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இதுதொடர்பான வீடியோவுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் சவுக்கு சங்கர் தமிழக காவல்துறை இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.