ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே 6வது நாளாக நீடிக்கும் சண்டை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் அதேவேளையில், கத்தார், இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள நிலைகளின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை ஈரான் மீண்டும் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு ஏற்படுத்திய சேதத்தின் அளவு அதிகமாக இருந்தபோதும், எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமான இழப்புகளை அமெரிக்கா சந்தித்து வருவது டிரம்ப்பை விரக்தியடையச் செய்துள்ளதாகவும், அதன் காரணமாகவே ஈரானின் தலைமை பொறுப்புக்கு யார் வந்தாலும் ஒழித்துக்கட்டுவேன் என்று பேசி வருவதாகவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரானிய ஆட்சி அதன் உச்ச தலைவரின் படுகொலைக்குப் பிறகு உடனடியாக சரிந்துவிடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் டிரம்ப் போர் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அரசியல் கட்சியினரும் விமர்சித்துள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் குறைந்தது 11 அமெரிக்க இராணுவ தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது. இதில் ஏழு தளங்களில் தகவல் தொடர்பு மற்றும் ரேடார் அமைப்புகள் அல்லது அவற்றின் அருகில் சேதம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பது ஊடங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பிப். 28 சனிக்கிழமை தொடங்கிய போர் திங்கட்கிழமை காலைக்குள், சந்தைகள் மீண்டும் திறப்பதற்கு முன்பு, முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “முதல் திட்டம்” தோல்வியடைந்ததால் “இரண்டாவது திட்டத்தை” கண்டுபிடிக்க தற்போது வரை டிரம்ப் போராடி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை 500க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் பதிவிட்டுள்ளன.

மேலும் வரும் நாட்களில் ஈரானின் தாக்குதல்களின் தீவிரம் அதிகரிக்கும் என்று புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளதும் குர்திஸ்தானில் தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதும் உயிரிழப்பை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

[youtube-feed feed=1]