டெல்லி: லடாக் எல்லையில் சீன வீரர்களுடன் நிகழ்ந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ அதிகாரி, 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணமடைந்ததாக முன்னதாக கூறப்பட்டது.
சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைந்ததாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 20 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் பிரதமர் மோடியுடன், அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி நரவனே உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தி உள்ளனர்.
மோடியின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எல்லை பகுதிகளில் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 20 பேர் பலியானதாக வெளியான தகவலை அடுத்து இருநாடுகளின் எல்லைகளிலும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.