டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் வந்துள்ள கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக கல்விஅமைச்சர் அதிஷி ஒருமனதாகதேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.
இவர் இன்று ( சனிக்கிழமை) முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருடன் புதியதாக மேலும் சிலஅமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அதிஷி ஒருமனதாக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொர்ந்து, அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது.
இதில், ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால்ராய், இம்ரான் உசைன் ஆகியோர் நீடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக புதிய அமைச்சர்கள் இருவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தம் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில், முதலமைச்சர் உள்பட 7 அமைச்சர்கள் முழுபலத்துடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இன்று (சனிக்கிழமை) பதவியேற்பு விழா நடத்த ஆம் ஆத்மி பரிந்துரைத்த நிலையில், புதிய முதலமைச்சர் தொடர்பான கோப்புகளை ஆளுநர் வி.கே.சக்சேனா, நேற்று முன் தினம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார். அதன்படியே இன்று தவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து செப்.26 மற்றும் 27ம் தேதிகளில் சட்டசபை சிறப்புக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். தற்போது வரை டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்துள்ளது.