ஈரோடு: பிப்ரவரி மத்தியில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என அங்கு ஆய்வு செய்த  அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் 97% நிறைவு பெற்றுள்ளதாக கடந்த ஆண்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். தொடர்ந்து மீதமிருந்த பணிகள், விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர்   ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி , “அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகள் விரைவு படுத்தி நடைபெற்று வருகின்றன. ஜனவரி இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவுக்கு வந்துவிடும். இதையடுத்து 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். சோதனை செய்து பார்ப்பது மிகவும் அவசியம். இதற்கு 10 நாள் தேவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிறு சிறு பணிகள் மட்டுமே தற்போது உள்ளன. பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். ஆறு பம்பிங் நிலையங்களும் தயார் நிலையில் உள்ளது . தற்போது வரை 99 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன” என்றார்.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்தவர்,  தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. மக்களுக்கான திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.சார்பிலோ அல்லது காங்கிரஸ் சார்பிலோ வேட்பாளர்களாக யார் நின்றாலும் அவர்கள் வெற்றிக்காக தி.மு.க.வினர் பாடுபடுவார்கள் என்றார்.