டெல்லி: உலகின் மிகவும் உயரமான, நீளமான அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.
இமாச்சல பிரதேசம் ரோதங் கணவாய்க்கு கீழே மணாலி – லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில் அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்கப்பாதை மூலம் மணாலி – லே இடையேயான தூரம் 46 கிமீ குறைவதோடு, பயண நேரம் 4 மணி நேரம் குறையும் என கூறப்படுகிறது. சுமார் 20 ஆண்டு களாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவடைந்து போக்குவரத்துக்கு தயாராகி உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் இமய மலையின் பிர் பஞ்சால் மலைத் தொடரை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை 9.02 கிமீ தூரம் கொண்டது. இதன் மூலம், உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, மிகவும் நீளமான சுரங்கப்பாதை என்ற பெருமையை பெற்றுள்ளது அடல் சுரங்கப்பாதை. ராணுவ தளவாடங்களை விரைவில் லே பகுதிக்கு கொண்டு செல்லும் வகையில், அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கடந்த 2000 ஆண்டு ஜூன் 3ம் தேதி ரோதங் சுரங்கப் பாதையை அமைப்பதற்கு முடிவு செய்தார். 2002ம் ஆண்டு மே 26ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இது பயன்பாட்டுக்கு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ரோதங் சுரங்கபாதைக்கு, ‘அடல் சுரங்கப்பாதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அடல் சுரங்கப்பாதையின் சிறப்பு அம்சங்கள்:
ஒவ்வொரு 1 கிமீ தூரத்தில் காற்று தர கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.
250 மீட்டர் இடைவெளிக்கு ஒரு சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 500 மீ. இடைவெளியில் அவசரகால வெளியேறும் வழி அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 60 மீ. இடைவெளியில் தீ அணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
குதிரை கால் லாடத்தை போல யு வடிவத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 2.2 கிமீ தூரத்தில் சாலை திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சுரங்கப்பாதையில் ஒரு நாளைக்கு 3,000 கார்கள், 1,500 கனரக வாகனங்கள் 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.