மெக்சிகோ,

மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 248 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் முழவீச்சாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நாளில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது பொது மக்களிடைய பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில், மெக்சிகோவில் உள்ள பியூப்லா மாநிலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.

இந்த நிலநடுக்கதின் காரணமாக ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள் இடிந்து நொறுங்கியது. பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

பள்ளிக்கூடம் நொறுங்கி விழுந்ததில், கட்டிட இடபாடுகளில் சிக்கி ஏராளமான பள்ளிக்க குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நில நடுக்கம் காரணமாக  மெக்ஸிகோ நகரத்தில் மட்டும் 117 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மெக்சிக்கோ நகரத்தின் தெற்குப் பகுதியிலுள்ள மோர்லோஸ் மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 55 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பசிபிக் கடலோரப் பகுதியில் கியூரோரோ மாநிலத்திலும் மக்கள் இடிபாடுகளில் சிக்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

நில அதிர்வு காரணமாக இடிந்து தகர்ந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகளில் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணப்படையினர் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதய நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ள தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.