பையனூர், கேரளா

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி ஒரு ஆலிலை அமைப்பில் 3 வயதுக் குழந்தையை கட்டிப்போட்டு ஊர்வலம் நிகழ்த்தியது மக்களிடைய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் என்னும் நகரத்தில் கிருஷ்ண ஜெயந்தையை முன்னிட்டு ஒரு ஊர்வலம் நடை பெற்றது.   அந்த ஊர்வலத்தில் சென்ற ஒரு வாகனத்தில் ஆலிலை போல ஒரு செட் போடப்பட்டு அதில் ஒரு கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தையை கட்டி வைத்து சென்றுள்ளார்கள்.  இது மக்களிடையே பெறும் அதிரிச்சியை ஏற்படுத்தியது.   இந்த விஷயத்தை கண்டவர்களில் ஒரு வரான ஸ்ரீகாந்த் உஷா பிரபாகரன் இதை புகைப்படமாக எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பதிவில், “பையனூரில் விவேகானந்தன் சேவா சமிதி அமைப்பினர் நடத்திய கிருஷ்ண ஜயந்தி சோபன யாத்திரை நடைபெற்றது.  அந்த ஊர்வலம் மதிய வேளையில் வெய்யிலில் நடை பெற்றது.   அதில் கலந்துக் கொண்ட பல வாகனங்களிலும் கிருஷ்ணர் வேடமிட்ட சிறுவர்களும் சிறுமிகளும் வித வித ஆடை அலங்காரங்களில் ஜொலித்தனர்.  அதே நேரத்தில் அந்த வெய்யிலில் வாடி வதங்கி காணப்பட்டனர்.

அந்த ஊர்வலத்தில் ஒரு வாகனத்தில் கிருஷ்ணர் வேடம் அணிந்த ஒரு 3 வயதுக் குழந்தை ஒரு பெரிய ஆலிலை மேல் படுத்திருப்பதைப் போல அமைக்கப்பட்டிருந்தது.  முதலில் அது ஒரு பொம்மை என தோன்றியது.  பிறகு அந்தக் குழந்தை கை, கால்களை அசைக்கும் போது தான் அது பொம்மை இல்லை என தெரிந்தது.  அந்தக் குழந்தையின் இடுப்பில் கயிறால் கட்டப்பட்டு இருந்தது.   வெயில் தாங்காமல் அந்தக் குழந்தை தன் கைகளால் தானே முகத்தை மறைத்துக் கொண்டது என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.

நான் உடனடியாக குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டேன்.  அவர்கள் அந்தக் குழந்தை பத்திரமாக உள்ளத என விசாரித்தனர்.  பின்பு குழந்தைக்கு ஏதும் துயரமோ காயமோ ஏற்பட்டிருந்தால் மட்டுமே தாங்கள் ஊர்வலத்தை நிறுத்த முடியும் என தெரிவித்தனர்.  பிறகு நான் அவர்களுடைய பெண் அதிகாரி ஒருவரிடமும் பேசினேன். அவர் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவரால் அந்த ஊர்வல இடத்துக்கு வரவோ, அதை நிறுத்தவோ முடியாது எனவும், தனது மேல் அதிகாரிக்கு இது பற்றி தெரிவிப்பதாகவும் கூறி விட்டார்.” என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பலரும் பகிர்ந்துள்ளனர்.  இது குறித்து குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த அதிகார் அம்ருதா, “நாங்கள் இந்த தகவல் வந்ததுமே அந்தக் குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துக் கொண்டோம்.  அந்த குழந்தைக்கு காயம் ஏற்படாத நிலையிலும்,  அந்தக் குழந்தையின் பெற்றோர் ஏதும் புகார் தராத நிலையிலும் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தோம்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பையனூர் காவல் நிலைய அதிகாரி, “எங்களுக்கு இது வரை இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை.  அதே போல குழந்தையை வலுக்கட்டாயமாக ஊர்வலத்தில் கொண்டு சென்றதாக எந்த தகவலும் இல்லை.   எனவே இதில் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என கூறினார்.

சமூக  வலை தளங்களில் இன்னும் இது குறித்து வாதங்கள் நடை பெற்ற வண்ணம் உள்ளது.

கிருஷ்ணரை குழந்தை வடிவில் கொண்டாடும் குருவாயூர் உள்ள கேரளாவில் அதே கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில் இது போல ஒரு குழந்தையை கொடுமைப்படுத்தியதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.