காட்மண்ட்,
உலக அமைதிக்காக எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டும் ஏறப்போவதாக நேபாளத்தை சேர்ந்த முதியவர் பகதூர் செர்கான் தெரிவித்துள்ளார். காட்மண்டுவில் வசித்துவரும் பகதூர் செர்கானுக்கு 85 வயதாகிறது. இவருக்கு 17 பேரக்குழந்தைகளும், 6 கொள்ளுப் பேரன்களும் உள்ளனர்.
கடந்த 2008 ம் ஆண்டு இவர் தனது 76 வயதில் 8850 மீட்டர் உயர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்தார். ஆனால் இந்தச்சாதனையை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுசிரோமிரோ என்பவர் முறியடித்தார். அவர் தனது 80 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். யுசிரோமிரோவின் சாதனையை முறியடிக்க பகதூர் கடந்த 2013ம் ஆண்டு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் பொருளாதார பிரச்னை, அனுமதி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் மலை ஏறும் வாய்ப்பு நழுவிப்போனது.
2015 ம் ஆண்டு அந்த வாய்ப்பு மீண்டும் அவருக்குக் கிடைத்தது. அதற்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு எவரெஸ்டின் அடிவாரப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. 19 பேர் உயிரிழந்தனர்.
இதனால் இந்தமுறையும் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதில் பகதூருக்குத் தடைஏற்பட்டது. அதையடுத்து இந்தாண்டு தனக்கு எவரெஸ்ட் சிகரத்தில் கால்வைக்க அனுமதி கிடைத்திருப்பதாக நேற்று அவர் காட்மண்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தமுறை எவரெஸ்ட் சிகரம் ஏறுவது உறுதி என்று அப்போது தெரிவித்தார். ஒருவேளை ஏறமுடியாமல் போனால் அதற்கு பருவநிலைதான் காரணமாக இருக்கமுடியும் என்றும் பகதூர் கூறினார்.
ரத்த அழுத்தம், சுவாசக் கோளாறு பிரச்னை போன்றவை தனக்கு இல்லை என்று கூறிய அவர், தனது உடல் எடை 5 கிலோ அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மலையேறுவதில் தனக்கு வெற்றி கிடைத்தால் சிரியா போன்ற நாடுகளில் உலக அமைதிக்காக பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக பகதூர் தெரிவித்தார்.