சென்னை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்துக்கு 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தார்.
3ம் நாளில், இந்திய விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்த நிலையில், கேப்டன் கோலியும், அஸ்வினும் நிலைத்து நின்று ஆடினர். ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் அடித்தனர். ஆனால், 62 ரன்கள் எடுத்த நிலையில், விராத் கோலி அவுட்டானார்.
ஆனாலும், அஸ்வின் அசரவில்லை. பேட்டிங்கிற்கு உதவாத கடைசிகட்ட பெளலர்களை வைத்தே இங்கிலாந்திற்கு போக்கு காட்டினார். ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அப்போது அஸ்வின் 90 ரன்களைக் கடந்திருந்தார். ஆனால், கடைசி விக்கெட்டாக வந்த முகமது சிராஜை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5வது சதத்தை எட்டினார் அஸ்வின்.
மொத்தம் 148 பந்துகளை மட்டுமே சந்தித்த அஸ்வின், 1 சிக்ஸர் & 14 பவுண்டரிகளுடன் 106 ரன்களை அடித்தார். சிராஜ் 16 ரன்களை அடித்தார். அதில் 2 சிக்ஸர்கள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், அஸ்வின் ஓலி ஸ்டோன் பந்தில் பெளல்டு ஆக, இந்திய இன்னிங்ஸ் 286 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
இதன்மூலம், இங்கிலாந்துக்கு மாபெரும் இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இங்கிலாந்து தரப்பில், ஜேக் லீச் மற்றும் மொயின் அலி தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.